நான் எனும் முரண்பாடுகள் மோதும் கரை


நான் எனும் முரண்பாடுகள் மோதும் கரை...
எனக்கு சந்தோஷம் பிடிக்கும்; ஆனால் எப்போதுமே சோகம் என்னுள் உலாவரும். உலகிலேயே எனக்குப் பிடித்த மனிதன் நான்தான்; உலகிலேயே நான் வெறுக்கும் மனிதனும் நான்தான்.
மற்றவரைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஆனால் ஏனோ தெரியவில்லை; நேற்று குகையில் பிறந்த குழந்தையும், துவக்கு துளைத்த தாயும், கடவுள் தரிசனம் மறுக்கப்பட்ட அறியாமையும் என்னை அழவைக்கிறது.
மனிதர்கள் மந்தை நடுவே என் புறம் பிரகாசிப்பது உண்டு; ஆனால் தனிமையில் மட்டுமே என் அகம் பிரகாசிக்கிறது.
எனக்குப் பிறர் என்னை நெருங்குவது பிடிக்கும்; ஆனால் நெருங்கி வந்தால் விலகி விடுவேன். பிறர் காயங்கள், கவலைகள் களைவது பிடிக்கும்; ஆனால் என் சோகம் என்னோடுதான். எல்லோரையும் அறியப் பிடிக்கும்; ஆனால் என்னை அறிய யாரையும் விடுவதில்லை.
மேலோட்டமானவன்; ஆனால் அதே நேரம் ஆழமானவன். நான் முரண்பாடுகள் மோதும் கரை.
Share this article
Generate a story card or copy link to clipboard
